அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, October 31, 2014

மோடியை தவிர்த்து ஷெரிப்பை விழாவுக்கு அழைத்த டெல்லி இமாமுக்கு முஸ்லிம்கள் கண்டனம்

டெல்லி: டெல்லி ஜிம்மா மசூதியின் அடுத்த இமாமாக தனது மகனை அறிவிக்கும் விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைக்காத தற்போதைய இமாம் சையது அகமது புகாரி, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப்பை அழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தனது செயல் நியாயமானதுதான் என்று புகாரி தெரிவித்துள்ளார்
.
டெல்லியில் புகழ்பெற்ற ஜிம்மா மசூதி உள்ளது. இதன் இமாமாக தற்போது சையது அகமது புகாரி உள்ளார். இவரது 19 வயது மகன் சபான் புகாரி அடுத்த இமாமாக அறிவிக்கப்பட உள்ளார். இதற்கான விழா நவம்பர் மாதம் 22ம் தேதி ஜிம்மா மசூதியில் வைத்து நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம் சிங் உள்ளிட்ட பல விஐபிகளை அழைத்துள்ளார் புகாரி.

அதேபோல அண்டை நாட்டு தலைவர்களையும் அழைத்துள்ளார். அதில் முக்கியமானவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அதே நேரம் இந்திய பிரதமருக்கு புகாரி அழைப்பு விடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஐஐஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நான் விழாவுக்கு அழைத்துள்ளேன். அதே நேரம் மோடியை அழைக்கப் போவதில்லை. மோடிக்கு இஸ்லாமியர்களைப் பிடிக்காது. அவர் முதல்வராக இருந்தபோதுதான் குஜராத்தில் மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே இமாமானின் கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் கமால் பரூக்கி கூறுகையில், இமாமின் கருத்தால், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். இது ஒன்றும் தனிநபர் விழா கிடையாது, இமாம் தனது இஷ்டப்படி விருந்தினர்களை அழைப்பதற்கு... என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி புகாரி கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Photobucket