அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, October 25, 2014

ஆவின் பால் விலை உயர்வு! - ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்! - எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

ஆவின் பால் விலை உயர்வு! - ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்! - எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;


சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த அநியாய விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது.

பால் கொள்முதல் விலையேற்ற அறிவிப்பு மற்றும் மூன்று ஆண்டுகளாக ஏற்றப்படாத விலை உயர்வு ஆகியவற்றை காரணங்காட்டி இந்த அநியாய விலை உயர்வு அறிவிப்பினை முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட பெருநகர மக்கள் பாலுக்காக முழுவதும் சார்ந்திருப்பது அரசின் ஆவின் நிறுவனத்தையே ஆகும். சாதாரண நடுத்தர மக்கள் முதல் அனைத்து மக்களும் ஆவின் பாலை நம்பியிருந்த நிலையில், லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் பதவியேற்று, தனது முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த விலை ஏற்றத்தை அறிவித்திருப்பது துரதிஷ்ட வசமானது. அதிமுக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் இதுவரை ஆவின் பால் லிட்டருக்கு ரூ.19.50 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முறைகேடு, கலப்படம் போன்றவை மூலமாக பல ஆயிரம் கோடி இழப்பு மற்றும் மக்களின் நம்பிக்கையை ஆவின் நிறுவனம் இழந்திருந்தது. இழந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாகவும், நிர்வாக அமைப்பை சீர்படுத்தும் நடவடிக்கையும் எடுப்பதற்கு பதிலாக இத்தகைய வரலாறு காணாத விலை உயர்வு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பால் விலை உயர்வு அறிவிப்பால், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையை உயர்த்தும் சூழல் உருவாகியுள்ளது. பால் விலை உயர்வால் ஏழைக் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும்.

ஆகவே தமிழக அரசு ஆவின் பால் விற்பனையை லாபம் தரும் நிறுவனமாக கொண்டு செயல்படுத்தாமல், மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விற்பனையை சேவையாக கருதி, உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket