அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, May 29, 2014

ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜண்டாக்களை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி! – எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்!

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில் மிக மோசமான நிலையில் இருக்கும் அரசு நிர்வாகத்தையும்,
பொருளாதார நிலைகளையும் சீர்படுத்துவதை விட்டுவிட்டு தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக அரசு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை ரத்துச் செய்வது, காஷ்மீரில் 370-ஆம் சட்டப்பிரிவை நீக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவதும், அதற்கான விவாதங்களை துவக்கிவிடுவதும் பாஜகவை பற்றி சிறுபான்மை மக்களும், அறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதை அச்சப்பட்டார்களோ அது நடக்கும் நிலையையே ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜண்டாக்களை செயல்படுத்தும் விதமாகவும் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

எண்ணற்ற கலாச்சாரங்களையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட இந்திய நாட்டின் வளங்களை பயன்படுத்துவதிலும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு கிடைக்கப் பெறுவதிலும், அரசியல் மற்றும் அரசாங்க அதிகாரங்களில் உரிய பங்களிப்பு பெறுவதிலும் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை போக்கி அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து சமூக நீதி கட்டமைப்பை மேம்படுத்த கொண்டுவரப்பட்டதே இடஒதுக்கீடு முறை.

அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களை கவனித்தால் மதரீதியான இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சாசனச் சட்டம் எதிரானதல்ல என்பது புரியும். இருந்தும் இடஒதுக்கீடு முறையானது அந்த சமூக மக்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தால் சமூக நீதி கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன.

நாட்டின் பூர்வீக குடி மக்களான முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்திலும் மற்றும் அரசாங்க அதிகாரத்திலும், வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியே உள்ளனர். இதனை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார், ரங்கநாத் கமிஷன்கள் தெளிவாக எடுத்தியம்பின. மேலும் அவர்கள் தலித் பழங்குடியினரைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர் என அறிக்கை அளித்ததோடு முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசை பரிந்துரைத்தது. இவை அரசால் நியமிக்கப்பட்ட ஆணையங்கள் தானே தவிர முஸ்லிம்களால் நியமிக்கப்பட்டவை அல்ல.

ஓட்டு அரசியலுக்காகவும், பாஜகவின் எதிர்ப்பினாலும் அந்த கமிஷன்களின் அறிக்கையை செயல்படுத்த கடந்த கால ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

இருப்பினும் முஸ்லிம்களுக்கு என்று இடஒதுக்கீடு அளிக்காமல் கடந்த டிசம்பர் 22, 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பிற்ப்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தர்கள், பார்சீக்கள் அடங்கிய சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித இட ஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்புகளில் வழங்கபடும் என அறிவித்தது.

முஸ்லிம்களுக்கு பெரிய அளவில் உபயோகம் இல்லாத இந்த அறிவிப்பிற்கு எதிராக ஆந்திரா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு மத ரீதியானது, எனக்கூறி உள் ஒதுக்கீட்டிற்கான அறிவிக்கையை 2012-ஆம் ஆண்டு மே மாதம் ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது. இதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கை தற்போதைய பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் அழுத்தம் காரணமாக வாபஸ் பெறும் என தெரிகிறது.

சமீபத்தில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா பேசிய பேச்சுக்கள் இதனை தெளிவுப்படுத்துகின்றன. மேலும் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான பிரதமரின் பதினைந்து அம்ச திட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி பேசிய பேச்சுக்கள் முஸ்லிம் விரோத பேச்சாகவே தெரிகிறது.

சிறுபான்மை நலத்துறை அமைச்சரே சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவதும், பேசுவதும் விசித்திரமான வேடிக்கையான ஒன்று.

ஆகவே இதுபோன்ற சிறுபான்மை மக்கள் விரோத நடவடிக்கைகளை நாட்டு நலனில் அக்கறைகொண்டு செயல்படுபவர்களும், மதசார்பற்ற சக்திகளும் கண்டிக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket