அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, May 24, 2014

பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான சிறகுகள் கொண்டவைதான் – எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான அணுகுமுறையில் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்பு ஒரு நிலையும், தேர்தலுக்கு பின்பு ஒரு நிலையும் கொண்டு இரட்டை வேடம் போடுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழக மக்கள் பொங்கியெழுந்த போது, இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தவறிவிட்டது எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழீழம் கொண்டுவருவோம் என அதன் தமிழக தலைவர்களும், தமிழீழம் பற்றி பேசிய அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினர்.

மேலும் மோடி அவர்கள் தமிழகம் வந்தபோது சிறிய நாடான இலங்கை தமிழக மீனவர்களை தாக்கி அழிப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் எனவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டுடனான அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக மீனவர்களின் நலனையும், தமிழர்களின் உணர்வுகளை காப்போம் என பிரச்சாரம் செய்தார். இதற்காக இராமேஸ்வரத்தில் கடல் தாமரை என்ற பெயரில் தனி மாநாடே சுஷ்மா தலைமையில் நடத்தினர்.

ஆனால் தற்போது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின், பிரதமர் வேட்பாளாரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் அவர்களின் இரட்டை நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசயத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதை தெளிவாக அறியலாம். இதேப்போன்று காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகளை போட்டும், பேச்சுவார்த்தை என்பது கோழைத்தனம் எனவும் தேசப்பற்றை ஓங்கி உரைத்த பாஜக, தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது. வெளியுறவுத் துறைக் கொள்கையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க.வும் இருக்கும். பா.ஜனதா, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது தற்போது நிரூபணமாகிவருகிறது. மேலும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸை பா.ஜ.கவும், பா.ஜ.கவை காங்கிரஸூம் எதிர்க்கிறது உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள் தான். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket