அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, January 18, 2014

ஆண்டு ஒன்றுக்கு, வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் 12 ஆக உயர்வு மத்திய மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, தற்போது வீடுகளுக்கு மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி கோரிக்கை


9 சிலிண்டர்களுக்கு அதிகமாக பயன்படுத்தும் குடும்பத்தினர், வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு (ஒரு சிலிண்டருக்கு ரூ.1,258) கியாஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இந்த கோரிக்கையை வற்புறுத்தி வந்தார். ஆனால், மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கடந்த வாரம் வரை கூறி வந்தார்.

12 சிலிண்டர்களாக உயர்வு

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி வீரப்ப மொய்லி, மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9–ல் இருந்து 12 ஆக அதிகரிக்கப்படும் என்றும், அது குறித்து மத்திய மந்திரிசபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த பெட்ரோலியம் அமைச்சக அதிகாரிகள், சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து மத்திய மந்திரி உத்தரவு வெளியானதும், அது தொடர்பான திட்டக்குறிப்பை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

15 கோடி வாடிக்கையாளர்கள்

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டர் (14.2 கிலோ) ஆண்டுக்கு 9 என்பது ஒரு குடும்பத்துக்கு போதாது என்றும், இதை 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார்.

கடந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து இருந்த மந்திரி வீரப்ப மொய்லி, ‘‘நாடு முழுவதிலும் சமையல் கியாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 15 கோடி பேர் உள்ளனர். அவர்களில் 89.2 சதவீதம் பேருக்கு 9 சிலிண்டர்கள் போதுமானது. இதனால் 10 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்த ஒதுக்கீடு எண்ணிக்கை 12 சிலிண்டர்களாக உயர்த்தப்பட்டால் 97 சதவீத வாடிக்கையாளர்களுக்கு முழு அளவில் மானிய விலை சிலிண்டர்கள் கிடைக்கும்’’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மானியச்சுமை அதிகரிப்பு

தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதன் மூலம், மத்திய அரசு வழங்க வேண்டிய மானியச்சுமை, ரூ.3,300 கோடியில் இருந்து ரூ.5,800 கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியச்சுமையை குறைப்பதற்காக கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கிளம்பிய கடும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, கடந்த ஆண்டு (2013) ஜனவரியில் இந்த எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தி இருந்தது. இனி, ஆண்டுக்கு 12 சிலிண்டர்களாக உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment

Photobucket