அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, December 6, 2013

கடலூர் மாவட்டத்தில் 222 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் 222 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் அலுவலரும் சுகாதாரத்துறை துணை இயக்குநருமான ஜவகர்லால் வெள்ளிக்கிழமை கூறியது. கடலூர் மாவட்டத்தில் 25 நம்பிக்கை மையங்கள் உள்ளன. இங்கு எச்.ஐ.வி பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.


கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மையங்கள் மூலம் எச்.ஐ.வியை கட்டுக்குள் வைத்திருக்கும் இலவச கூட்டு சிகிச்சை மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், வடலூர், பண்ருட்டி நெய்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம், கடலூர் மத்திய சிறை ஆகிய 7 இடங்களில் லிங்க் ஏ.ஆர்.டி சென்டர்கள் மூலம் கூட்டு சிகிச்சை மருந்துகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 234 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு 425 நபர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 2013 மார்ச் முதல் கடந்த அக்டோபர் வரை 48 ஆயிரத்து 298 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு 312 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட 222 குழந்தைகள் உள்ளனர். எய்ட்சால் பெற்றோர் இறந்து 56 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றோடு உள்ளனர். இந்த குழந்தைகளின் கல்விக்கு அரசு உதவி வருகிறது. மேலும் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக உதவ இலவச சட்ட உதவி மையமும், உள வியல் ரீதியில் உதவ பாசிட்டிவ் நெட் ஒர்க் கூட்டமைப்பும் உள்ளன. இவற்றை எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment

Photobucket