எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை..
சவூதி அரேபியாவில் இந்தியாவைச்
சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில்
பெரும்பாலானோர் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்.
அண்மையில் சவூதி அரேபிய அரசு
எடுத்த சில நடவடிக்கையாலும், புதிதாக அமல்படுத்தியுள்ள தொழிலாளர்
சட்டத்தாலும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் செயல்படும் தொழில்
நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் 10 சதவீதம் அந்நாட்டு குடிமக்களை
சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாலும், வெளிநாட்டுத்
தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சட்ட விரோதமாக நாட்டில்
தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இலவச விசாவில் தங்கியிருப்பவர்களை
நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால் இந்தியாவைச் சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு திரும்பும்
அபாயம் ஏற்பட்டு தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
திரும்பி வருகின்றனர்.
கேரளாவில் ஆயிரக்கணக்கானோர்,
இவ்வாறு நாடு திரும்பி வருவதால், கேரள அரசு அந்த மாநிலத்தின் மூன்று
சர்வதேச விமான நிலையங்களில் உதவி மையங்களை திறந்துள்ளது. அதோடு நாடு
திரும்பும் தொழிலாளர்களின் பயணக்கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கும் ஏராளமான
தொழிலாளர்கள் வேலை இழந்து திரும்பி வருகின்றனர். குறிப்பாக தஞ்சை,
திருவாரூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்களில் இதற்கான உதவி
மையங்களை தமிழக அரசு திறப்பதோடு, மத்திய அரசின் உதவிகளையும் இந்த
தொழிலாளர்களுக்கு பெற்றுத் தர வேண்டும். அதோடு வேலை வாய்ப்பு உட்பட
மறுவாழ்வு பணிகளை இவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசை
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment