அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, November 13, 2012

பொதுமக்கள், அனைத்து கட்சி கோரிக்கை எதிரொலி மானிய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மத்திய அரசு முடிவு

புதுடெல்லி,-
சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனைக்கு மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.
ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும்
வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இதை மத்திய அரசு சமீபத்தில் மாற்றி அமைத்தது.அதாவது ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் மானிய விலையில் வாங்கிக்கொள்ள முடியும் என்றும், அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள சிலிண்டர்களை சந்தை விலையில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தது.

கடும் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் முடிவை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் கோரி நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.இந்த நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6&ல் இருந்து 9 ஆக உயர்த்துவதாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் டெல்லி மாநில அரசு அறிவித்தது. இதேபோல் மராட்டிய மாநில அரசும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க முடிவு செய்தது.

காங். தலைவர்கள் யோசனை
என்றாலும் பல்வேறு தரப்பில் இருந்தும், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தது.கடந்த வாரம் அரியானா மாநிலம் சூரஜ்குண்ட் என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்திலும், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த வேண்டும் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.இதுபற்றி பின்னர் கருத்து தெரிவித்த பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, இந்த யோசனை குறித்து பிரதமருடனும், நிதி மந்திரியுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.

9 ஆக உயர்த்த முடிவு
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் வீரப்ப மொய்லி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் எண்ணிக்கை 6&ல் இருந்து 9 ஆக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதாவது, மானிய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.இதுபற்றிய மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் சிலிண்டர்கள்
ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெறும் போது, அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு கூடுதல் சிலிண்டரையும் சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதாவது அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment

Photobucket