புதுடெல்லி:கடந்த மாத இறுதியில்
ஃபைஸாபாத்தில் பதர்ஸா மற்றும் அண்மைப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு
எதிராக நிகழ்த்தப்பட்ட வகுப்புக் கலவரத்தில் போலீஸாரின் பங்கை நிரூபிக்கும்
வீடியோக் காட்சிகளை புலனாய்வு அதிகாரிகள் பரிசோதித்துவருகின்றனர்.
நகரத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சி.சி.டி.வி மற்றும்
கலவரம் நடக்கும் போது சிலர் மொபைலில் பதிவு செய்த வீடியோவில் , போலீஸ்
மற்றும் ப்ரொவிசனல் ஆர்ம்ட் கான்ஸ்டாபுலரி(பி.ஏ.சி) படையினர், கலவரம்
நிகழும்பொழுது அதனை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த காட்சிகள்
பதிவாகியுள்ளன. வன்முறையாளர்கள் ஆக்ரோஷத்துடன் ஆயுதம் ஏந்தி வரும்பொழுது
சாலையின் மறு புறம் போலீசார் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த காட்சியும்
புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
வன்முறைகள் தொடர்பான வீடியோ காட்சிகள்
கிடைத்துள்ளதாகவும், போலீசாருக்கு இதில் பங்குண்டா? என்பதுக்குறித்து
ஆராய்ந்து வருவதாகவும் புதிதாக பதவியேற்ற ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்
அஜய் சுக்லா தெரிவித்துள்ளார். கலவரத்திற்கு பிறகு மாவட்ட
மாஜிஸ்ட்ரேட்டும், போலீஸ் சூப்பிரண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
போலீசார் மெத்தனமாக நிற்கும் வீடியோ காட்சிகள் கிடைத்ததன் அடிப்படையில்
இடம் மாற்றம் நிகழ்ந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .கலவரத்தை
தடுப்பதற்கு பதிலாக, அதற்கு உற்சாகம் ஊட்டியதுடன், சில போலீசார்
பார்வையாளர்களாக நின்றனர் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். போலீஸ்
இன்ஸ்பெக்டர் ராங்கில் உள்ளவர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில்
அடங்குவர். கலவரத்தை அடக்கும் அளவுக்கு போலீஸ் இருந்ததும் வீடியோவில்
பதிவாகியுள்ளது.
கலவரக்காரர்கள், வீட்டில் நுழைந்து
கண்ணில் கண்டதையெல்லாம் எடுத்த பிறகு ஓலையால் வேயப்பட்ட வீட்டுக்கூரைக்கு
தீவைத்தார்கள் என்றும், சத்தம் போட்டு வீட்டிற்கு வெளியே போலீசார்
பார்த்துக்கொண்டு சும்மா நின்றார்கள் என்றும் பாதிக்கப்பட்ட ஹைருன்னிஸா
கூறுகிறார்.
அக்டோபர் 24-ஆம் தேதியும் தொடர்ந்து வந்த
நாட்களிலும் நடந்த கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர்
காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் கொள்ளையடிக்கப்பட்ட
பின்னர் தீவைத்துக்கொளுத்தப்பட்டது .ஃபைஸாபாத்தில் உள்ள பதர்ஸா, ருடவ்லி,
ஷாஹ் கஞ்ச் ஆகிய இடங்களில் முஸ்லிம்களை குறிவைத்து கொள்ளையும், தீவைப்பு
சம்பவங்களும் நடந்தது. அக்டோபர் 26-ஆம் தேதி பதர்ஸா நகரத்திற்கு வெளியே
பத்தேஹ்பூர், தக்கேவா, இஸ்லாமாபாத் பகுதிகளில் வன்முறையாளர்கள் கடைகளையும்,
வீடுகளையும் தீக்கிரையாக்கி பொருளாதார சேதத்தை ஏற்படுத்தினர்.
கலவரத்தில் முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பு
ஏற்பட்ட பிறகும் கலவரத்தின் பெயரால் போலீசார் பாதிக்கப்பட்ட மக்களையே கைது
செய்துள்ளனர் என்பது கொடுமையின் உச்சக்கட்டமாகும்.
No comments:
Post a Comment