துபை: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும்
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) துபையில் நேற்று
(17.01.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் சோஷியல் டெமாக்ரட்டிக்
பார்ட்டி ஆஃப்
இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M.
தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக
பொறியாளர் அப்துல் கபூர் வரவேற்புரை நிகழ்த்தினார். வலசை ஃபைஸல்
அறிமுகவுரையை நிகழ்த்தியதோடு, நிகழ்ச்சியை அழகுற நெறிப்படுத்தினார்.அடுத்து சிறப்புரையாற்றிய SDPIயின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. தெஹ்லான் பாக்கவி அவர்கள் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது:
இந்தியாவை ஒருமைப்படுத்தியது முஸ்லிம்கள். இந்தியாவுக்கு முஸ்லிம்கள் செய்த சேவையைச் சொல்வதென்றால் இது ஒன்று போதும். இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்திய விடுதலைக்காகவும்,
முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆதிக்க சக்திகளுக்கெதிராக விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் முஸ்லிம்கள். அன்னியர்களுக்கெதிராக வீரச் சமரம் புரிந்த வங்கச் சிங்கம் சிராஜுத் தவ்லாவை யாராலும் மறக்க முடியாது. அப்படி தியாகம் செய்துள்ள முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் இந்நிலைக்கு முக்கியக் காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.
இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகள் என்பது தமிழக அளவிலுள்ள பிரச்னைகள் மட்டும் அல்ல. நாம் அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். வட நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்கள் சேரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் நிலையை ஆராய அமைக்கப்பட்டது நீதிபதி சச்சார் கமிஷன். ஆனால் நீதிபதி சச்சார் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரவேயில்லை. மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்று முஸ்லிம்களின் நிலையை ஆராய்ந்தார். ஏனெனில் தமிழகம், கேரளாவில் முஸ்லிம்களின் நிலை ஓரளவுக்கு பரவாயில்லை.முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழி நடத்துவதில் அகில இந்திய அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ). துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும். இந்தத் தேர்தலில் கிடைத்திடும் ஒன்றிரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படாமல் எதிர்கால சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் சம்பந்தமான பொதுமக்களின் சந்தேகளுக்கு SDPI மாநிலத் தலைவர் அவர்கள் விடை பகர்ந்தார். சமுதாய ஒற்றுமை தொடர்பான வினா எழுப்பப்பட்ட போது தமிழகத்தில் ஒன்றுபட்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்க்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தயார் என்பதை தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டோம். ஆனால் அத்தகைய முயற்சிகளுக்கு மற்றவர்கள் தயார் இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே போன்று தொகுதிகளை முடிவு செய்துவிட்டு குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரிக்கக் கோருவது ஒற்றுமை முயற்சி ஆகாது என்று குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்ட முயற்சி கூட்டணிகள் அமைக்கப்படும் முன்பே நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
SDPI மாநிலத் தலைவர் அவர்களுக்கு எழுத்தாளரும், பத்திரிகையாளருமான M.S.
அப்துல் ஹமீது நினைவுப் பரிசினை வழங்கினார். இறுதியாக, கவிஞர் பத்ருத்தீன்
கவிதை நடையில் நன்றியுரையை நவின்றார். கலந்துகொண்டவர்கள் SDPI மாநிலத்
தலைவர் அவர்களிடம் தங்கள் மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment