புதுடெல்லி:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற உதவிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் தேர்தலில் மிகச்சிறந்த போட்டியை வெளிப்படுத்திய எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும்
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது: வலுவான நான்கு கட்சிகள் களத்தில் இருந்த பிறகும் போட்டியிட்ட 24 தொகுதிகளில் ஒரு தொகுதியில் 2-வது இடத்தையும், ஐந்து தொகுதிகளில் 3-வது இடத்தையும், ஒன்பது தொகுதிகளில் 4-வாது இடத்தையும் பெற்றது கட்சி பலம் பெற்று வருகிறது என்பதற்கான நிரூபணமாகும். எஸ்.டி.பி.ஐ மிகச்சிறந்த போட்டியை வெளிப்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி.
பா.ஜ.கவை புறக்கணித்து விட்டு, கர்நாடகா மக்கள் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது மதசார்பற்ற கொள்கையின் வெளிப்பாடாக காங்கிரஸ் கருதுமானால், முஸ்லிம்களுக்கு எதிரான மறைமுக செயல்திட்டத்தை(அஜண்டா) அவர்கள் கைவிடவேண்டும். ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று கருத்து இருந்தால் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்க தங்களது கட்சிக்காரர்களையும், அதிகாரிகளையும் கட்டவிழ்த்து விடக்கூடாது.
நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ அறிக்கையை திருத்திய விவகாரம், ரெயில்வே போர்ட் உறுப்பினர் நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க கர்நாடகா தேர்தல் முடிவுகளை பயன்படுத்தினால் அது மக்களை ஏமாற்றுவதற்கு சமமாகும். அரசியல்-சமூக நிலைபாடுகளின் வெற்றியாக இத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உரிமை கொண்டாட முடியாது. இவ்வாறு எ.ஸயீத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment