அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, May 9, 2013

நிதாகத் விவகாரம்: சவூதியில் இருந்து வெளியேற இ.சி. கோரியுள்ள 18,000 இந்தியர்கள்

ஹைதராபாத்/டெல்லி: சவூதியில் அந்நாட்டு குடிமகன்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நிதாகத் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதையடுத்து அங்கு வாழும் சுமார் 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவிருக்கின்றனர். சவூதி அரேபியாவில் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 2 மில்லியன் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில் சவூதி குடிமக்கள் வேலையின்றி தவிப்பதைபோக்க அந்நாட்டு அரசு நிதாகத் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி சவூதி குடிமகன்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
 
 இந்த சட்டத்தால் சவூதியில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. சவூதியில் சட்டவிரோதமாக, முறையான விசா இன்றி அல்லது விசா காலம் முடிந்தும் அங்கு தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அந்நாட்டு அரசு 3 மாத கால அவகாசம் கொடுத்தது. இந்த காலக்கெடு விரைவில் முடிகிறது. இந்நிலையில் சவூதியில் இருந்து வெளியேற விரும்பி சுமார் 18,000 இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் எமர்ஜென்சி சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
 
 நாடு திரும்ப அதிக அளவில் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதற்கு நிதாகத் சட்டம் காரணமில்லை என்றும், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சவூதி அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை தான் காரணம் என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். நிதாகத் சட்டம் குறித்து இந்தியர்கள் கவலை தெரிவித்ததையடுத்து வயலார் ரவி தலைமையிலான குழு சவூதி சென்று அந்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
 
இந்திய சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Photobucket