ஹுப்ளி/பெங்களூர்:சட்டப்பேரவை
தேர்தலையொட்டி கர்நாடகா மாநிலத்திற்கு பிரச்சார சுற்றுப் பயணத்தை
மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தார்.
கர்நாடகாவில்
சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
சென்றடையவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழலில்
உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜ.கவின் 5 ஆண்டுகால ஆட்சியில்
சமூக ஐக்கியம் சீர்குலைந்துவிட்டதாகவும், இதில் தனக்கு கவலை உண்டு என்றும்
மன்மோகன் சிங் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் மேலும் பேசியது:
கர்நாடகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான காலம் கனிந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து, கர்நாடகத்தில்
ஊழலற்ற, நல்லாட்சி மலர வழி ஏற்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 5
ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள்
முழுமையாகத் தடைபட்டுள்ளன. மத்திய அரசு வழங்கிய மானியத்தையும் கர்நாடக பாஜக
அரசு முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், குடிநீர், மின்சார
சிக்கல்களை மாநிலம் எதிர்கொண்டுள்ளது.
பாஜக
அரசில் அங்கம் வகித்த பல அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில்
சிக்கியுள்ளனர். மேலும் பலர் ஊழலுக்கு துணை போயுள்ளனர். அமைச்சர் பதவியை
இழந்து, சிறைக்குச் சென்றவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சியை
வழங்கிய பாஜக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும். மக்கள் விரும்பும்
நல்லாட்சியை கர்நாடகத்தில் வழங்க காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து
ஆதரவளிக்க வேண்டும்.
5 ஆண்டுகால
பாஜக ஆட்சியில் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தின்
நலன் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பாஜக அரசின் ஊழல், நாடு முழுவதும்
விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் பாஜக
அரசு தோல்வி கண்டுள்ளது.
காங்கிரஸ்
ஆட்சி செய்தபோதெல்லாம் கர்நாடகம் வளமான, செழிப்பான மாநிலமாகத் திகழ்ந்தது.
எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, தரம்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் முதல்வர்கள்
ஆட்சி செய்த போது கர்நாடகத்தின் புகழ் உலகெங்கும் பரவியிருந்தது.
குறிப்பாக, பெங்களூர் சர்வதேச அளவில் புகழின் உச்சியில் இருந்தது.
பாஜக
ஆட்சிக்கு வந்த பிறகு, சர்வதேச அளவில் கர்நாடகம், பெங்களூரின் நற்பெயருக்கு
களங்கம் ஏற்பட்டுள்ளது. தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில்
கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானது. தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள்,
பொறியாளர்களை நாட்டுக்கு அளித்ததில் கர்நாடகம் முன்னோடியாக உள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய வேலைவாய்ப்புகளை
உருவாக்க, வேளாண்மைத் துறையில் முன்னேற்றம் காண, உள்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவோம்.
சிறுபான்மை
மக்கள் அதிகமாக உள்ள ராய்ப்பூர், பெல்லாரி, குல்பர்கா, பிடார் ஆகிய
பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைமுறைப்படுத்தவில்லை.சமுதாய
ஐக்கியமின்மையும், பாதுகாப்பற்ற சூழலும் இவ்விடங்களில் நிலவுகிறது.
மத்திய
அரசின் திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட ஏராளமான நிதிகளை மாநில அரசு
உபயோகிக்கவில்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதித்
திட்டம், மதிய உணவு திட்டம், கிராமீய சாலை வளர்ச்சி ஆகியவற்றிற்கான நிதிகளை
உபயோகிப்பதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி
ஆட்சிக்கு வந்தால் கர்நாடகா மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு
செல்லும்.இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
No comments:
Post a Comment