அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, January 4, 2013

கடலூர், சிதம்பரம், நெய்வேலியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூர், : கடலூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பூபதி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட எஸ்பி ராதிகா சாலை பாதுகாப்பு குறித்த வழிப்புணர்வு வாகன கண்காட்சியை துவக்கி வைத்தார்.


போக்குவரத்து கழக நிர்வாகிகள் உதயகுமார், ஸ்ரீதரன், செல்வம் பேசினர். கிளை மேலாளர்கள் கணபதி, மணிவண்னன், சிவக்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிவேல், கிரிசன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற 7ம்தேதி வரை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் 24வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று சிதம்பரத்தில் நடந்தது. சிதம்பரம் காந்தி சிலை அருகே விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. பேரணியை ஏஎஸ்பி துரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, ரவிச்சந்திரன், சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், கண்ணன், ஆட்டோ டிரைவர்கள், வாகன ஓட்டி பழகும் பயிற்சி மைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட வாகனங்களில் சாலை விதியை கடை பிடிக்க வேண்டும், வாகனங்களின் கூரையின் மீது ஏறி பயணம் செய்யக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி செல்லக்கூடாது என்பதை விளக்கும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது.  பிரசார ஊர்தி சிதம்பரம் நகரம், காட்டுமன்னார்கோயில், குமராட்சி, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.

நெய்வேலி: நெய்வேலியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது. மத்திய பேருந்து நிலையத்தில் விபத்தை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் கனரக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் வேலுமணி மற்றும் அலுவலர்கள் அந்த பணிகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Photobucket