காஸ்ஸா:காஸ்ஸா
முனையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக மிரட்டல்
விடுத்துள்ளது. நேற்று நடந்த விமானத் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட
எட்டு ஃபலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டனர். அதேவேளையில்
சர்வதேச நாடுகள்
அமைதிக்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமைதி
தூதுவராக பிரான்சு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் ஃபாபியஸ்,
மேற்காசியாவுக்கு வருகை தந்துள்ளார். தாக்குதல் தீவிரமடைவதை தடுக்கவும்,
போர் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவும் பிரான்சின் உதவியை அவர்
வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் அவர், இஸ்ரேல்
அதிகாரிகளுடனும், ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும்
பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரான்சு அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள
வாய்ப்பு இருப்பதாக ஃபலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால்,
இஸ்ரேல் 6-வது நாளாகவும் தாக்குதலை தொடருகிறது. தாக்குதலில் இதுவரை ஆறு
பெண்களும், 15 குழந்தைகளும் உள்பட 64 பேர் மரணமடைந்துள்ளனர். ஹமாஸ்
போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.
காஸ்ஸாவில்
அல் குத்ஸ் தொலைக்காட்சி சானலின் அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தின் மீது
இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்களுக்கு காயம்
ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மாற்றப்பட்டனர். ஸ்கை
நியூஸ், அல் அரேபியா, ஹமாஸுக்கு சொந்தமான அல் அக்ஸா டி.வி ஆகியவற்றின்
அலுவலகங்கள் இயங்கும் இன்னொரு கட்டிடமும் தாக்கப்பட்டது. இரண்டாவது நடந்த
தாக்குதலில் 2 பத்திரிகையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. தங்களுடைய அலுவலகம்
தாக்கப்பட்டதாக ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்
தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல்
விடுத்துள்ளார். காஸ்ஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினரை குவித்துள்ள
சூழலில் தரைப்போரை துவங்கும் வாய்ப்புக் குறித்து சந்தேகம்
வலுவடைந்துள்ளது. தரைப்போர் இஸ்ரேலுக்கு சர்வதேச ஆதரவை இழக்கச் செய்யும்
என்று பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் எச்சரிக்கை
விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை பிரிட்டன் விரும்புவதாக அவர்
தெரிவித்தார்.
போர்
நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எகிப்து
அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார். எகிப்து அமைதி முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது. எகிப்து பிரதமர் ஹிஸாம் கண்டீல் வெள்ளிக்கிழமை
காஸ்ஸாவுக்கு சென்றிருந்தார். இதனிடையே பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ்
தலைவர் காலித் மிஷ்அல் கெய்ரோ சென்றுள்ளார். நபீல் அரபி தலைமையிலான அரபு
லீக் குழுவினர் செவ்வாய்க்கிழமை காஸ்ஸாவிற்கு செல்வர். கெய்ரோவில்
நடைபெறும் அமைதிக்கான முயற்சிகள் வெற்றிப் பெறுமா என்பதுக் குறித்து
தற்போது எதுவும் கூற இயலாது என்று ஃபலஸ்தீன் மூத்த அதிகாரியொருவர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment