அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, December 4, 2013

வருகிற மக்களவை தேர்தலில் ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் பிரச்னைகள் விவாதிக்கப்படும்! – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

முக்கிய அரசியல் கட்சிகளால் புறந்தள்ளப்பட்டுள்ள ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிச்சத்திற்கு கொண்டு வர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கூட்டத்திற்கு தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம், செயலாளர்கள் இல்யாஸ் தும்பே, முகம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் பேராசிரியர் பி.கோயா, பொருளாளர் முகம்மது ஷஹாப்தீன், முன்னாள் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் முகம்மது யூசுஃப், யா முகைதீன், அனிஸ் அகமது, ஹமீது முகம்மது, மௌலானா உஸ்மான் பேக், முகம்மது இஸ்மாயில் மற்றும் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதிய ஜனதா,காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் கூட உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி தேவையற்ற விஷயங்களில் சண்டையிட்டு வருகின்றன.

ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே அதிகரித்து வரும் இடைவெளி,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்,அடிக்கடி மாற்றப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,மின்சார கட்டணம்,போக்குவரத்து கட்டணம்,கல்வி மற்றும் மருத்துவம் போன்ற சேவை துறைகள் தனியார் மயமாக்கல் போன்ற விஷயங்களை தற்போது நடைபெற்று வரும் அரசியல் பிரச்சாரங்கள் உதாசீனப்படுத்துகின்றன. இந்த முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வு எதுவும் அரசியல் அதிகாரத்தை விரும்பும் இவர்களின் செயல்திட்டத்தில் இல்லை.

முஸஃபர்நகர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்ற வகுப்பு கலவரங்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் இந்துத்துவ பாசிசவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பதை தேசிய செயற்குழு எச்சரிக்கையுடன் பார்க்கிறது. சமுதாயங்களை பிளவுபடுத்தி மதச்சார்பற்ற ஓட்டுகளை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கான மற்றுமொரு முயற்சிதான் முஸஃபர்நகர் கலரவங்கள்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளால் ஆதிவாசிகள்,தலித்கள் மற்றும் முஸ்லிம்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடமிருந்து வரும் சிறு எதிர்ப்பும் கூட கடுமையாக ஒடுக்கப்படுகிறது. இவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு ஜனநாயக விரோத கறுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் காவல்துறையின் ஆட்சி நடக்கும் நாடாக நமது தேசம் மாறி வருகிறது. இந்த கசப்பான உண்மைகளை எந்த பிரதான அரசியல் கட்சியும் பெரும்பாலும் பேசுவதில்லை என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் சுட்டிக்காட்டுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்களை ஜாமீனை மறுத்து சிறையில் வைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) மற்றும் ஆயுத படைகள் சிறப்பு சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற நடைபெறும் கோரிக்கைகளுக்கு இவர்கள் ஆதரவு தர மறுப்பது இவர்களின் அரசியல் வஞ்சகத்தின் சரியான உதாரணம். நீதிபதி மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின் படி வழங்க வேண்டிய முஸ்லிம்களின் இடஒதுக்கீடு என்ற உரிமையை ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் மறுப்பது இவர்களின் சிறுபான்மை விரோத போக்கை காட்டுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை திரும்ப பெறுவது,மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி வரும் மாதங்களில் பெரிய அளவில் போராட்டங்களையும் மக்கள் திரள் நிகழ்ச்சிகளையும் நடத்த இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Photobucket