அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, November 24, 2013

லெஹர் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வருமா...?- சிதம்பரத்தில் கன மழை

சென்னை: அந்தமான் அருகே உருவெடுத்துள்ள புதிய லெஹர் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், புயல் அதி தீவிரப் புயலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போதுதான் ஹெலன் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு மழை பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் அந்தமான் அருகே புதிய புயல் உருவாகியுள்ளது.

இந்தப் புயல் இந்தியாவின் முக்கிய கரைப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் படு தீவிரமாக இருக்கும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. ஆனால் மழை பெய்யலாம்

இப்போதைய நிலவரப்படி இது தமிழகத்தை தாக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது. அதேசமயம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரத்தில் கன மழை

சிதம்பரத்தில் இன்று அதிகாலை முதல் கன மழை கொட்டி வருகிறது. இதனால் சிதம்பரத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அங்கு 59 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

நகரின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. தொடர் கன மழையால் தில்லையம்மன் கோயில் குளத்தை சுற்றி இந்து அறநிலையத் துறையினரால் சமீபத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கனமழையினால் நகரே ஸ்தம்பித்துப் போய் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அதிகாலையில் லேசான மழை

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சில இடங்களில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஞாயிற்றுக்கிழமை பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Photobucket