அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, June 7, 2013

திடீர் நிபந்தனைகளால் பள்ளிகள் திறப்பதில் சிக்கல்

கடலூர்: திடீரென அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளால் வருகிற பத்தாம் தேதிக்கு பள்ளிகள் இயல்பாக திறக்கப்படுவதில் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் சங்கம் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் கலை விஜயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக கடலூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளி வாகனங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தரச்சான்று, ஒவ்வொரு பள்ளியிலும் போக்குவரத்து குழு அமைத்து, வாகனங்களுக்கு குழுவிடமிருந்து தகுதி சான்று பெற வேண்டும் என்ற உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றாத பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று அளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தரச்சான்று பெற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை தகுதி சான்று என்ற பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

தற்போது இயங்கி வரும் பள்ளிகள் அனைத்தும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளன. திடீரென்று உள்ளூர் திட்டக் குழுமம் தங்களிடம் முறையான அனுமதி பெற வில்லை எனக்கூறி, பள்ளிக் கட்டிடங்களுக்கு சதுர மீட்டருக்கு ரூ. 148 ஜூன் மாதத்திற்குள் செலுத்த வேண்டும், என அறிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளியும் பல லட்சம் பணம் கட்டவேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி பகுதி பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்துவரியும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்து இந்த பள்ளியில் இவ்வளவு மாணவர்கள் படிக்க தகுதியான வசதி உள்ளது என சான்றிதழ் அளிக்கும் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஐந்தாண்டிற்கு ஒரு முறை பள்ளிகளை புதுப்பிக்கும் முறையை கொண்டு வரவேண்டும். திடீரென அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளால் வருகிற பத்தாம் தேதிக்கு பள்ளிகள் இயல்பாக திறக்கப்படுவதில் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Photobucket