அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, January 8, 2013

காட்டுமன்னார்கோவிலில் அரசின் இலவச ஆடுகள் இறக்கும் அபாயம்

காட்டுமன்னார்கோவில், :கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சன்கொல்லை கிராமத்தில் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. ஆடுகளை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கி வந்து கால்நடை துறை சார்பில் உள்ளாட்சி நிர்வாகம் பயனாளிக்கு
வழங்கியது. இதில் வடக்கு தெருவில் வசிக்கும் 6 குடும்பத்துக்கும் தலா 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. இப்பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை ஒத்துவராததால் பயனாளிக்கு வழங்கப்பட்ட ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கின்றன. முறையாக பராமரிக்கப்பட்டும் ஆடுகள் இறப்பதால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

   அப்பகுதியில் உள்ள ரவி என்பவருக்கு வழங்கப்பட்ட ஆடுகள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென இறந்தது. நேற்று மேலும் இருவருக்கு சொந்தமான ஆடுகள் இதே போன்று இறந்தது. தொடர்ந்து அரசின் சார்பில் வழங்கப்பட்ட ஆடுகள் அனைத்தும் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் ஆடுகள் இறக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் இறந்த ஆடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும் என கால்நடை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் பயனாளிகளுக்கு வழங்கிய 15 தினங்களிலேயே ஆடுகள் இறப்பதால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

 மற்ற ஆடுகள் நன்றாக இருக்கும் நிலையில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள் மட்டுமே இறந்து வருவது ஏன் என்று புரியாமல் பொதுமக்கள் திகைத்துள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே ஆடுகளை வாங்கி பயனாளிகளுக்கு அளித்திருந்தால் அவை இறந்திருக்காது என்றும், வெளி மாநிலங்களிலிருந்து வாங்கி வந்து வழங்குவதால் ஆடுகள் இறக்கின்றது என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Photobucket